நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

திங்கள், 16 பிப்ரவரி, 2015

மதுரை எப்பொழுது உருவாக்கப்பட்டது



கூடல் (மதுரை) எப்பொழுது உருவாக்கப்பட்டது என்பதை பார்ப்போம். மெளவுரியர் படையெடுப்பை பற்றி, அகம் 69 line 10, 251 line 12, 281 line 8-9, மற்றும் புறம் 175 line 6, ஆகியவை கூறுகிறது. மூன்று மெளரியர்களில், சந்திரகுப்தர் காலம் கி.மு 322 – 298, பிந்துசாரனின் காலம் கி.மு.298 – 273 மற்றும் அசோகரின் காலம் கி.மு 273 – 232 ஆகும். இதில் அசோகர் தமிழ் மன்னர்களோடு நட்புடன் இருந்தார். தன் மகள் சங்கமுகியை, புத்தமதம் பரப்ப அனுப்பி பாண்டியர்களோடு மிக நட்போடு இருந்தார். சந்திரகுப்தர் அரசவையில் தங்கி இருந்த Megasthenes, தனது Indica  புத்தகத்தில் தமிழ் மன்னர்களோடு போர் பற்றி குறிப்பிடவில்லை. அதாவது பிந்துசாரன் காலத்திலயே போர் நடந்து இருக்கும். பிந்து சாரன் காலமாகிய கி.மு 298 - 273 ல் பாண்டியர்கள் பலம் பொருந்தியவர்களாக, மதுரையைத் தலைநகராகக் கொண்டு இருந்தார்கள்.

ஹத்திபுரவில் கலிங்க மன்னன் காரவேல (கி.மு.165) கல்வெட்டு இதை உறுதிப்படுத்துகிறது. அக்கல்வெட்டில் 113 வருட, பாண்டிய, சேர, சோழ மன்னர்களின் கூட்டணியை உடைத்து விட்டதாக அவர் கூறுகிறார். கி.மு 165 லிருந்து 113 வருடம் பின் கி.மு. 278 வருகிறது. அதாவது பிந்துசாரன் காலத்தில் அவன் படையெடுத்தான் என்பதை அகம், புறம் பாடல்களோடு ஒத்து போய், அச்செய்தியை உறுதிப் படுத்துகிறது.


‘சங்க கால மன்னர்களின்’ புத்தகப்படி கூடலை வென்ற நெடுந்தேர் செழியனின் காலம் கி.மு.325 - 300. அப்பொழுதே கூடலை மூதூர் என்று அகம் 113 கூறுகிறது. ஆதலால் மதுரையின் தொடக்க காலம் கி.மு. 500 ஆக இருக்கலாம் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.
 

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

மதுரையை யார் கட்டியிருப்பார்கள்? அல்லது வரலாறு தெரிந்து முதல் மன்னன் பெயர் என்ன?



இதற்கு நாம் அகம், புறம், மதுரை காஞ்சி மற்றும் மாங்குளம், அசோகர், காரவேல கல்வெட்டுகள் மற்றும் ‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ vol.I பத்மஜா ரமேஷ் & புருஷோத்தமன், இவைகளை ஒப்பு நோக்கவேண்டும். நாம் அகுதை யார்?, அவன் ஆண்ட கூடல் எது? மற்றும் பூதபாண்டியன் (இன்றும் நாகர்கோயில் அருகில் பூதபாண்டி என்று ஒரு ஊர் உண்டு), நெடுந்தேர் செழியன் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கீழ் கண்டவற்றிற்கு ‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ மிகவும் உதவியாக இருந்தது. முதலில் அகுதையை எடுத்துக் கொள்வோம். புறம் 347, 5-7 அகுதை கூடலை ஆண்டதாகக் கூறுகிறது. புறம் 233, 2-4 அகுதை திகிரி (சக்கராயுதம்) வைத்திருந்தும் போரில் இறந்தான் என்று கூறுகிறது. அகம் 76, 2-3 அகுதை கள்ளோடு இருப்பான் என்றும், அகம் 113, 4-8 அவன் நாடு பழமையானது என்றும் கூறுகிறது. மேலும் அவன் நாடு எப்பொழுதும் பரபரப்பாக இருக்குமென்றும், கோசர்கள் (ரோமர்கள்) அவன் பாதுகாவலர்களாக இருந்தார்கள். அகம் 208, 5-9 & 15-18, கூறுகிறது, அவன் நண்பன் வெளியன் வேந்தன் ஆஅய் எயினன், மிஞிலியொடு போரில் இறந்ததால், அகுதை, மிஞிலியை பலிவாங்க அவனோடு போரிடுகிறான். இந்த ஜந்து பாடல்களில், புறம் 347 அகுதை, கூடலை ஆண்டான் என்றும் மற்ற பாடல்கள் அவன் படையின் வலிமையைப் பற்றியும், அவன் ஆண்ட கூடல் பழமையானது என்றும் கூறுகிறது.

நாம் அகுதை ஆண்ட கூடல் எங்கு உள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அகம் 296, 10-13, கொற்கை வேந்தன் நெடுந்தேர் செழியன் கூடலை கைப்பற்றியதாகக் கூறுகிறது. 2378 சங்க பாடல்களில் கூடல் என்ற பெயர் 28 பாடல்களில் வருகிறது. இந்த 28 பாடல்களில் 27 பாடல்களில் வழுதி கூடல், செழியன் கூடல், பாண்டியன் கூடல், பஞ்சவர் கூடல் என்று பாண்டிய மன்னர்களை குறித்தே கூறுகிறது. கபிலர் பாடிய புறம் 347 மட்டும் அகுதை கூடல் என்று கூறுகிறது. கொற்கை வேந்தன் பாண்டியன் நெடுந்தேர் செழியன் கூடலைக் கைப்பற்றியதாக அகம் 296 கூறுகிறது. அதன் பின் கூடல் பாண்டியர்களின் தலைநகராக மாறுகிறது. அதனாலேயே சங்க இலக்கியங்கள் பாண்டியர்களை கூடலோடு இணைத்துக் கூறுகிறது.

பாண்டியர்கள் கூடலை மதுரை (மதுரை காஞ்சி மற்றும் திருமுருகாற்றுப்படையில் மதுரை, கூடல் என்று இரு பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது – மதுரை காஞ்சி 429-430, திருமுருகாற்றூப்படை 70-71) என்று பெயர் மாற்றி அழைத்தனர். இது மதுரையின் மூலப் பெயர் கூடல் என்பது தெளிவாகிறது. கூடல் என்ற பெயர்க் காரணமான confluence of two or more rivers ம் பொருந்துகிறது.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

இன்று இருக்கும் மதுரை, அழித்து பின் புதிதாக நிறுவப்பட்டதோ அல்லது வேறு இடத்தில் இருந்து இங்கு நிறுவப்பட்டதோ அல்ல



மதுரையைப் பற்றி எழுதுவதற்கு முன், தோராயமாக மதுரை எப்பொழுது உருவாக்கப்பட்டது, அது தொடர்ந்து வாழும் நகரா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்பகாலத்தில் இருந்த மதுரை இப்பொழுது இருக்கும் நகரிலிருந்து தென்கிழக்கே இருந்து இருக்கும் என்று திரு. V.கனகசபை (The Tamils Eighteen Hundred Years Ago by V.Kanakasabhai) கூறுகிறார். அவர் கூறும் பகுதி வண்டியூரைக் கடந்து சிறிது தூரத்தில் உள்ள பகுதி. வைகை நதி தன் வழித்தடத்தை மாற்றியதால் வடக்குக்கு பதில் இப்பொழுது அங்கு தெற்கே ஒடுவதாகக் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகிறார் அந்த பழைய மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், சங்க இலக்கியங்களில் கூறுவது போல் சரியாக மேற்கேயுள்ளது (தற்பொழுது மதுரையின் தென்மேற்கே அமைந்துள்ளது). சிலம்பில் கூறுவது போல் அந்த பழைய மதுரையை கண்ணகி தீயிட்டு அழித்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

சிலம்பின் வஞ்சின மாலை 41-53 கூறுகிறது, கண்ணகி தன் மார்பகத்தை திருகி, மூம்முறை வலதுபுறம் சுழற்றி தன் மார்பை ஏறிவதுப் போல் தன் கைகளை எறிந்தாள். இச்செயல் சபிக்கும் செயலாகும். தீ கடவுளாகிய அங்கி, குழந்தைகள், பிராமனர்கள், உத்தம பெண்கள் மற்றும் வயதானவர்களை தவிர்த்து மதுரையை அழிக்கட்டும் என்று அவள் கூறுகிறாள். இச்செயலும், கூற்றும் அவள் சபிக்கவே செய்தாள் என்பதை தெளிவுபடுத்துகிறது, அவள் மதுரையை தீயிடவில்லை என்பது உறுதியாகிறது.

மேலும் நான் ஏற்கனவே பதிவு செய்த Paln of Madura -1757, மதுரையைச் சுற்றி நதிகள் ஒடுவதும், கூடல் என்ற பெயருக்கு அதுவே காரணம் என்பதையும் பார்த்தோம். சங்க காலத்திலும் மதுரையை சுற்றி நீர் இருந்தது என்பதற்கு சிலப்பில் சான்றுள்ளது. சிலம்பு, புறஞ்சேரியிருந்த காதை 176-83 இதை உறுதிப்படுத்துகிறது. கவுந்திஅடிகள், கோவலன், கண்ணகியிடம், கடவுளும், தேவர்களும் வாழும் ஊர் மதுரை, ஆதலால் நாம் நகரை சுற்றி வந்து நகரினுள் போகலாம் என்று கூறுகிறர். அவர்கள் வடகரையில் ஒரு ஒடத்தில் ஏறி, தென்புறம் ஆள் அரவம் இல்லாத ஒரு படித்துறையில் இறங்கி, சிறிது தூரம் கிழக்கு பகுதியில் நடந்து மதுரையின் தலைவாயினுள்ளே (சுவாமி சன்னதி – பூக்கடை தெரு) போகின்றனர். அவர்கள் மதுரையின் வடப்புறம் உள்ள வைகையில் சென்று, மேற்கேயுள்ள கிருதுமால் நதியில் பயணித்து பின் தெற்கில் கிருதுமால் நதிக்கரையில் (தற்போதைய கீரைத்துறை பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது) அமைந்த ஒரு துறையில் இறங்கியதால், மதுரையின் மூன்று புறமும் நீர் இருந்ததை உறுதிப் படுத்துகிறது. நான்காவது திசையான கிழக்கில் (தற்சமயம் முனிச்சாலை, கீழவாசல் இன்று சாக்கடையாக ஒடும் கால்வாய்) நிச்சயம் அன்றே இப்பொழுது இருக்கும் கால்வாய் ஒடியிருக்கும். இது இன்றைய அமைப்போடு ஒத்து போகிறது. மேலும் இது கூடல் பெயர் காரணத்தையும் உறுதிப்படுத்திகிறது.

திருமுருகாற்றுப்படை மற்றும் சங்க இலக்கியங்களும், திருப்பரங்குன்றம் மதுரையின் மேற்கே உள்ளதாகக் கூறுகிறது. ஆனால் தற்சமயம் அது மதுரையின் தென்மேற்காக உள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் கி.பி.773ல் ஒரு குகை கோவிலாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் திருமுருகாற்றுப்படை 72-77 படி, திருப்பரங்குன்றம் ஒரு குன்றின் மேலும், அதன் அருகில் ஒரு சுனை உள்ளதாகவும், குன்றின் கிழ் ஒரு குளம் உள்ளதாகவும் கூறுகிறது. இன்று மதுரையின் சரியான மேற்கில் உள்ள சமணர் மலை மேல் ஒரு சுனையும், கீழ் ஒரு தாமரை குளமும் உள்ளது. இதுவே ஆரம்பத்தில் திருப்பரங்குன்றமாக இருந்து இருக்கும்.

களப்பிரர் காலத்தில் (கி.பி.200 – 600) சமணம் மதுரையின் முக்கிய சமயமாக இருந்தது. அப்பொழுது அது சமணர் மலையாக மாறி இருக்கலாம். பின் பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்திய பொழுது, அவர்கள் தற்பொழுதைய திருப்பரங்குன்றத்தை கட்டியிருக்கலாம்.

புதிதாக சமணர் மலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டை, 2013 ஜனவரியில், ‘Central Institute for Classical Tamil’  ஆய்வு செய்தார்கள். அதை கல்வெட்டு நிபுனர் திரு.ஜராவதம் மகாதேவன் அவர்கள் படித்து கூறியது – ‘பேருந்தேரூர் உழி தாதய் அயம்’. இதற்கு அர்த்தம் பேருந்தேரூரின் தாதய் அயம். தாதய் என்றால் மரியாதைக்கு உரியவர், ஊர் தலைவர், வயதானவர் என்று பொருள். அயம் என்றால் மலை மீதுள்ள சுனை என்று பொருள். பேருந்தேரூரின் பெரியவர் சீரமைத்த அல்லது வெட்டிய சுனை என்று பொருள் படுகிறது.