நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

மதுரையின் நகர் அமைப்பு – பாகம் 1



மதுரையின் அமைப்பு

என் ஆய்வின் மிக முக்கியமான தகவல், கூடல் பெயர் காரணமும், நகர அமைப்பும்தான். இதை பயன்படுத்துவோர் என் பெயரை மேற்கோள் காட்டி பயன்படுத்தவும்.

மதுரையின் முதல் பெயர் கூடல். கூடல் என்ற பெயர் காரணம், ஏற்கனவே கூறியபடி confluence of two or more rivers. மதுரையின் வடக்கே வைகையும், மேற்கு மற்றும் தெற்கே கிருதுமாலும், மேலும் வைகையின் இரண்டு துணை நதிகள் மேற்கிலும், கிழக்கிலும் ஒடுகிறது. இது 1757 வருட பிரிட்டிஷ் சர்வே வரைபடத்தில் காணலாம். இன்றும் இந்நீர் வழி சாலை அகலம் குறைக்கப்பட்டு, சாக்கடை நீர் கலந்து செல்வதை Google Earth  மூலம் பார்க்கலாம்.

மதுரையின் வடக்கை வைகை அமைந்துள்ளது. அதன் தெருக்களும், கட்டிடங்களும் சரியான வட-கிழக்கு திசையில் அமையாமல், 14கோணத்தில் வடக்கு பக்கம் சாய்ந்துள்ளது. இதற்குக் காரணம் காற்றின் திசையாக (predominanent wind direction) இருக்கலாம். மதுரை நகர்அமைப்பு சிந்து சமவெளி நாகரிகத்தை ஒத்துள்ளது. ரோமர், கிரேக்க நாகரிகம் போல் பெரிய கட்டிடங்களோ, வழிபடும் இடமோ அல்லது அரண்மனையோ இல்லை. அணைத்தும் தேவைக்கு ஏற்ப உள்ளது.

எல்லா தெருக்களும் ஒன்றுக்கு ஒன்று இணையாகவும், குறுக்காகவும், மற்றும் குடியிருப்புகள், சிறு தொழில்கள், தானியம் விற்பனை கடைகள், தங்கம், வைரம் கடைகள், இரும்பு வார்ப்பட பொருட்கள் விற்பனை கடைகள், சோத்து கடைகள் (உணவகங்கள்) போன்றவைகளுக்கு தனி தனி பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது (கி.மு. இரண்டாம் நூற்றூண்டில் எழுதப்பட்ட மதுரை காஞ்சியில் உள்ளது). இன்றும் கிழக்கு பகுதி தானிய பொருள் கடைகள், தெற்கே நகை கடைகள், மேற்கே 1980 வரை பரத்தியர் இருக்கும் இடமாக இருந்தது, மற்றும் வடக்கே குடியிருப்பு பகுதியாக உள்ளது.

மதுரை நகர் கி.பி.1168ல் அதன் விரிவாக்கத்துக்கு முன், கோட்டை சுவரும், அகழியும் விடுத்து அதன் மொத்த பரப்பளவு 0.4779 சதுர கி.மீ. மற்றும் அதன் நீளம் கிழக்கு – மேற்கு, மற்றும் வடக்கு – தெற்கு 2268 அடியாகும் (GIS map or google earth அதன் tools கொண்டு அளக்கலாம்). மதுரையின் தெய்வம் சிவன் (மதுரை காஞ்சி) நகரின் சரியான மையத்தில் உள்ளார். அவர் மதுரையின் தலைவாயில் அமைந்த (தற்சமயம் கிழக்கில் சாமி சன்னதி – பூக்கடை தெரு, மேற்கில் மேல கோபுர தெரு) தெருவில் சரியாக நடு மையத்தில் உள்ளார். கிழக்கில் சிவனுக்கும் கோட்டை வரை (தற்சமயம் விட்டவாசல்) 1134 அடி உள்ளது, அதே மாதிரி மேற்கிலும் 1134 அடி. இப்பொழுதும் மேற்கில் மேல பாண்டியர் கோட்டை அகழ் தெரு (திண்டுக்கல் ரோடு மாப்பிள்ளை விநாயகர் சோடா அருகில்) இருக்கிறது. சிவனிலிருந்து இத்தெரு வரை 1064 அடியும், தெருவின் அகலம் 28 அடியும், கோட்டை கொத்தளம் 42 அடியும் சேர்த்தால் 1134 அடி (GIS Map).

குலசேகர பாண்டியன் காலத்தில் (கி.பி.1168-75), நகர் வட புறத்தில் வைகை இருந்ததால் அதை விடுத்து மற்ற திசைகளில் விரிவாக்கப்பட்டது (திருவாலவாயுடையார் திருப்பணி விவரம், திருப்பணிமாலை, சீதளப் புத்தகம் முதலியவற்றினின்று தொகுக்கப்பட்ட்து – மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறுR.பஞ்சநதம் பிள்ளை). அவர் மற்ற மூன்று திசைகளிலும் 1134 அடி விரிவுபடுத்தினார். மேலும் அவர் சுவாமி கோவிலுக்குள் அர்த்த மண்டபம், மகாமண்டபம் மற்றும் சுவாமி சன்னதிக்கு மேல் கோபுரம் கட்டினார்.




குலசேகர பாண்டியன் சுமார் 1500 ஆண்டுகள் 28 அடி X 28 அடி இருந்த சுவாமி சன்னதியை விரிவுபடுத்தினார். சுவாமி சன்னதியின் கர்ப்பகிரகம் உபபிடம் சேர்த்து 33 அடி x 33 அடி உள்ளது (‘Madurai through the ages’ – Dr.(Miss) D. Devakunjarai, M.A., M.Ed., Ph.D – Thesis submitted to the Universsity of Madras in 1957,  - Arulmegu Meenakshi Sunareswarar Thirukkoil). அது அடிசதானம் மட்டும் 28 அடி x  28 அடியாக இருக்கும். அவர் பழைய மதுரையின் தெரு அகலம், கட்டிட மனையின் நீள, அகலம் மற்றும் 14கோணம் மாறாமல் விரிவாக்கத்திலும் அதே அளவுகளைக் கொண்டு அமைத்தார்.

பாண்டிய கோட்டைக்கும், நாயக்கர் கோட்டைக்கும் கோண வித்தியாசத்திற்கு காரணம்





Courtesy: Madras district gazetteers - Madura vol.I


1757ல் வரைப்படத்தில் வடக்கு, கிழக்கு 14கோணத்தில் உள்ளது. மேற்கு, தெற்கும் 90கோணத்தில் உள்ளது. தெற்கு கோட்டை சுவர் கிழக்கு சுவரோடு சேரும் இடம் ‘ட’ வடிவில் இருப்பதற்கு காரணம், இரண்டும் வெவ்வெறு கோணத்தில் இருப்பதுதான்.

இதற்கு காரணம், மதுரையின் தெற்கும், மேற்கும் பாண்டிய நாட்டை சேர்ந்த பகுதி. கிழக்கேயும், வடக்கேயும் இருந்தே படையெடுப்பு யாவும் இருக்கும். ஆதலால் இக்கோட்டை சுவர்கள் நன்கு பராமரிக்கப்பட்டது.

மற்றெரு காரணம் கி.பி.1310ல் முகமதியர் படையெடுப்புக்கு பின், மதுரை மக்கட் தொகை வெகுவாக குறைந்துவிட்டது. எஞ்சிய மக்கள் வடக்கு, மற்றும் கிழக்கு பகுதியிலும், மேற்கே சிலரும் இருந்தனர். மதுரையின் தலை வாசல் கிழக்கிலும், குடியிருப்பு பகுதி வடக்கே இருந்ததே இதற்குக் காரணம். இதனால் தெற்கேயும், மேற்கேயும் மரங்கள் வளர்ந்து காடு போல் இருந்தது (A Geographical, Statistical and Historical Description of Hindustan, and the Adjacent Countries, Vol. II, by Walter Hamilton ESQ) Google Earth வரைபடத்தில் வடக்கேயும், கிழக்கேயும் பல தெருக்களும், கட்டிடங்களும் 14 கோணத்தில் இருப்பதைக் காணலாம். அதே மாதிரி தெற்கேயும், மேற்கேயும் எல்லா தெருக்களும், கட்டிடங்களும் 90கோணத்தில் இருப்பதைக் காணலாம். மேற்கே மட்டும் சில தெருக்கள் 14கோணத்தில் உள்ளன.

விசுவநாத நாயக்கர் (கி.பி.1532-64) பழைய கோட்டை மற்றும் அகழியை அழித்து புதிய இரட்டை சுவர் கோட்டை கட்டினார் (1)History of the Nayaks of Madura by S.Krishnasamy Iyer, 2)Madura, a tourist’s guide by Anon.Thomas, 3)Madras district gazetteers – Madura vol.I by W.Francis ICS). மதுரை நகர் அமைப்பு பற்றி நாயக்க மன்னர்களுக்கு, அவர்கள் அயலிலிருந்து வந்ததால் தெரிந்திருக்கவில்லை. மக்கள் வசிக்கமால் காடு மாதிரி இருந்த மேற்கு மற்றும் தெற்கு கோட்டை சுவரை இடித்து புதிதாக சரியான திசையில் (கோணம் இல்லாமல்) கட்டினார். மேலும் வடக்கு மற்றும் கிழக்கு ஏற்கனவே இருந்த கோட்டை சுவர் அருகில் புதிதாக இரண்டாவது கோட்டை சுவர் கட்டினார். இதன் காரணமாகவே கோண வித்தியாசமும், ‘ட’ வடிவமும்.

புதன், 21 ஜனவரி, 2015

சங்க இலக்கியங்கள் – சரித்திர ஆதாரம்



அகம், புறம், மதுரை காஞ்சி, திருமுருகாற்றுப்படை, ஆகிய சங்க இலக்கியங்களும் மற்றும் காவியமாகிய சிலம்பும் இவைகளில் கூறப்படும் செய்திகள், அசோகா, கலிங்க மன்னன் காரவேலா மற்றும் மாங்குளம், அழகர் மலை, சமனர் மலை கல்வெட்டுகள் செய்தியோடு ஒத்து போகிறது.

மதுரை காஞ்சி மதுரையை பற்றிய ஒரு சுற்றுலா வழிகாட்டி என்று சொல்லலாம். அது விடி காலையிலிருந்து, இரவு வரை உள்ள வாழ்க்கையை பற்றியும், மக்கள் வழிபடும் கடவுள் பற்றியும், அவர்கள் கொண்டாடும் விழாக்கள் பற்றியும், வெளிநாட்டு வணிகர்கள் மற்றும் அவர்கள் வணிகம் செய்யும் பொருட்கள் பற்றியும், இசை, ஆடல், கலை பற்றியும் மற்றும் மக்கள் உண்ணும் உணவு பற்றியும் இன்னும் பல விசயங்களையும் கூறுகிறது.

மாங்குளத்தில் கி.மு. 2ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் – பிராமி கல்வெட்டுகள் 6 உள்ளன. அதில் 2 கல்வெட்டுகள் நெடுஞ்செழியன் என்ற மன்னனை பற்றி கூறுகின்றன. மதுரை காஞ்சியில் வரும் மன்னன் பெயர் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் அவன் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு (‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ – Dr.பத்மஜா ரமேஷ் & V.P.புருஷ்த்துமன்). கல்வெட்டும், மதுரை காஞ்சியும் ஒத்து போகிறது. மேலும் மாங்குளம் கல்வெட்டில் குறிப்பிடப்படும் வெள் அரிய் இன்று வெள்ளரிப்பட்டி (T.V.S. சக்கரா அமைந்துள்ள இடம்) என்று அழைக்கப்படுகிறது.

அழகர் மலை கல்வெட்டு 12லிம் வெவ்வேறு மதுரை வணிகர்களை பற்றி கூறுகிறது. இது மதுரை காஞ்சியில், வணிகர்களை பற்றி கூறப்படுவதோடு ஒத்து போகிறது.

சங்க இலக்கியங்கள் பாடலாகவும், மற்றும் அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது என்று கூறி அதை சான்றாக ஏற்று கொள்ள  சரித்திர அறிஞர்கள் மறுக்கிறார்கள். நம்பகத்தன்மையை பொருத்த வரை, உயர் திரு.உ.வே.சாமிநாத அய்யர் (தமிழ் தாத்தா) தனியார்களிடமும், மடங்களிலும் இருந்து ஒலை சுவடிகளை பெற்று, அவைகளில் இடை சேர்க்கை மற்றும் கரையானால் அரிக்கப்பட்ட பகுதிகளை சரி பார்த்து, பதிப்பிக்க செய்தார். இதில் பத்து பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் கிடைத்துயுள்ளது.

மற்றொரு காரணமாக கூறப்படும் பாடல்களாக உள்:ளது என்பதற்கு தமிழ் கலாச்சாராத்தை பார்த்தால் தெரியும். எந்த ஒரு பொருள் பற்றி எழுத வேண்டுமானலும், அதை பாட்டாகவே எழுதுவார்கள். மருத்துவம், சோதிடம், சித்தர் பாடல்கள் யாவும் பாடலாகவே உள்ளன. தமிழில் முதல் உரை 1857ல் எழுதப்பட்டு 1879ல் பதிப்பிக்கப்பட்ட மயூரம் வேதாநாயாக பிள்ளை அவர்களின் ‘பிராதாப முதலியரின் சரித்திரம்’ ஆகும். அதற்கு முன்னால் யாவும் பாடலாகவே இருந்தது.

அகம், புறம், பத்து பாட்டு மற்றும் சிலம்பில் உள்ள செய்திகள் கல்வெட்டுகளோடு ஒத்து போகிறது ஆகவே இவைகளை சரித்திர ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சுவாரசியமான விசயம், நம் இந்திய சரித்திரத்திற்கு முக்கியமான ஆதாரமாக எடுக்கப்பட்டது, Megasthenes எழுதிய Indica ஆகும். ஆனால் இதன் மூல பிரதி பாதுகாக்கப்படவில்லை. இவர் எழுதிய Indica வை மேற்கோள் காட்டி பிற கிரேக்க அறிஞர்கள் எழுதியதை, E.A.Schwanbeck, 1846ல் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். ஆக இவ்வாறு தொகுக்கப்பட்ட Indica வை நம்பத்தன்மை வாய்ந்ததாக கருதும் பொழுது சங்க இலக்கியம் ஏன் மறுக்கப் படுகிறது?