நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

கொரோனா - அறிவியல் மற்றும் கடவுளர் கொள்கை - பகுதி 2


சிந்துவெளி நாகரிகத்திலோ, அல்லது கி.மு.200க்கு முந்திய தமிழர் நாகரிகத்திலோ, கடவுளை வணங்கும் முறை யாவும் கருவளத்தை (fertility) நோக்கியே இருந்தது (இந்த வளை பகுதியில், ‘நம் வாழிப்பாட்டு முறை’ பார்க்கவும்)) அப்பொழுதைய நம் வாழ்க்கை முறை அறிவு சார்ந்த அறத்துடன் கூடிய (சென்னை பல்கலைக்கழக அகராதிப்படி,  அறம்  என்றால் ஒழுக்கம், தர்மம்), வாழ்க்கை முறையாக இருந்தது. அது நம்பிக்கை சார்ந்தது அல்ல. அறிவு சார்ந்தது. இம்முறையில் நம் சிந்தனை கூர்மையாக இருந்தது. தேவையில்லாத சடங்குகள், அறிவுக்கு பொருந்தாத நம்பிக்கைகள் நம்மிடம் இல்லை.

மதுரை காஞ்சியில் (சுமார் கி.மு.200 ல் எழுதப்பட்டது), மதுரையில் கடவுளர் திருவிழாக்களாக இரண்டு கூறப்படுகிறது. ஒன்று முருகன் பிறந்த நாள் (ஒணம் என்று கூறப்படுகிறது), மற்றொன்று சிவனுக்காக, 7 நாள் அந்தி விழா (வடமேற்கு பருவகாலமாகிய அக்டோபர், நவம்பர் மாதத்தில், வைகையில் புது வெள்ளம் வரும் பொழுது, சிவனுக்காக கொண்டாடப்படும் விழா). இதில் முருகனுக்கு சேவல் பலி கொடுத்தார்கள், சிவனை வைத்து நடத்தப்படும் அந்தி விழாவில் மாடு, ஆடு பலி கொடுத்து கொண்டாடினார்கள். இந்த விழாக்கள் எல்லாம் மக்கள் பக்தி மற்றும் சொந்த, பந்தத்தோடு மகிழும் ஒரு நிகழ்வாகவே கருதியிருக்கிறார்கள்.

அவர்கள் அறிவியலில் மிகவும் சிறந்து இருந்தார்கள். புதை வடிகால் (underground drainage), அதற்குரிய குழாய்கள், இரும்பு மற்றும் தாமிரமும், அதன் உலோக கலப்பும் (alloys)  சார்ந்த உலோகத்தொழில் (metallurgy), மெல்லிய தங்க நகை வேலை, முத்து மற்றும் பவழம் முதலியவற்றில் மெலிதான ஓட்டை மற்றும் அது சம்பந்தமான தொழில்,  நெசவுத் தொழில் - சேலை வெவ்வேறு வடிவமைப்பில் – பூ வேலைப்பாடுடன், சுண்ணாம்பு தொழில், பூவில் இருந்து, நறுமண பொருள் தயாரித்தல், சாம்பிரானி தொழில், உணவு கடை, தோல் மிதியடி தொழில், துணிக்கு கஞ்சி போடும் தொழில், செங்கல் தயாரித்தல் மற்றும் கட்டிடம் கட்டும் தொழில், கரும்பு ஆலை, தானியங்கும் அம்பு விடும் கருவி, என்று இது போன்ற தொழில்கள் பல இருந்தன.

அவர்கள் அறிவு சார்ந்து மட்டுமல்ல, அறம் சார்ந்தும் இருந்தார்கள். நீதி வழங்க நீதிமன்றங்களுக்கு பதிலாக, (நீதிமன்றங்கள், கோடு போட்டது போல் சட்டம் மட்டும் பேசும்) அறம் கூறும் அவை இருந்தது (ஒரே காரியம், சூழ்நிலைக்கு ஏற்தர்மம் மாறும்,, உ.தா. ஓருவன் சிறுபிள்ளயாக இருக்கும் பொழுது அவன் தாய் அவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு கண்டிக்கிறாள், ஆனால் அதே தாய் தன் முதுமையில் தன்படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக கண்டிப்பது தவறு). 

சுவாமி விவேகானந்தர் கடவுளை கால்பந்து விளையாடும் பொழுதுகூட காணலாம் என்றார். அதன் பொருள், நம் கவனம் முழுவதும் ஒருமித்த கருத்துடன், அவ்விளையாட்டில் இருந்தால் அதுவே கடவுளைக் காண உதவும். தேவையற்ற சடங்குகளை விட அதுவே சிறந்தது. அதையே தமிழ் சமுகம் அக்காலத்தில்  தங்கள் வாழ்க்கை முறையாகக் கொண்டார்கள். நமக்கு மேல் ஒரு சக்தி – கடவுள் உள்ளார் என்பதோடு அவர்கள் நின்றுவிட்டு, தன் வேலையை கண்ணும் கருத்துமாகச் செய்தார்கள்.

கடவுளைக் காண - உணர வேண்டும் என்று நினைப்பவர்கள் சித்தர்கள் ஆனார்கள். அவர்கள் கடவுள் என்றால் கிட உள், GOD என்றால் go deep என்பதற்கு ஏற்ப,  தங்களுக்குள் உள்ள கடவுளைத் தேடினார்கள். அதற்கு அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்ந்தார்கள். அச்சமயத்தில் அவர்களுக்கு கிடைத்த மூலிகை அறிவை நமக்கு சித்த மருத்துவமாகக் கொடுத்தார்கள்.

தெளிவாக சிந்திக்கும் திறன் நம் மரபனுவில் உள்ளது. மறந்து போன அந்த கூர்நோக்கி சிந்திக்கும் திறனை திரும்பவும் தட்டியெழுப்புங்கள். இன்று செய்தி வெளியிடும் ஊடகங்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு, நடுநிலை விடுத்து, ஒரு சார்பான செய்திகளையே சொல்கிறது. சமூகவலை தளங்களில் பல தகவல்கள் போலியானது. நம்முள் இருக்கும் கூர்நோக்கி சிந்திக்கும் திறனே, நம்மை இத்தகைய போலி செய்திகளிலிருந்து காக்கும்.

எழுமின், விழிமின், கூர்நோக்கி சிந்திக்கும் திறனை பெருமின், என்பதே நம் தாரக மந்திரமாக இருக்கட்டும்.

ஜேம்ஸ் கவனவு (James Kavanaugh)  நம்புவது போல், என் நம்பிக்கையும்

“குளிர் காலம் வெகு நாட்கள் இருந்துவிட்டது, விரைவில் வசந்த காலம் வரும்” (“Winter has lasted too long, spring will come soon”).

சனி, 25 ஏப்ரல், 2020

கொரோனா - அறிவியல் மற்றும் கடவுளர் கொள்கை - பகுதி 1



கொரோனா இன்று உலக மக்கள் யாவரையும்  பயமுறுத்தும் ஒரு தொற்று வியாதியாக உள்ளது. இந்த நோயினால் எல்லா நாடுகளும், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில், பாதிக்கப்பட்ட்டுள்ளது. இப்பொழுது அனைவரும்மூக இடைவெளி விட்டு, கூட்டம் கூடாமல் இருக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள். இதில், அதிகம் கூட்டம் கூடும் இடமாகிய அனைத்து மத கடவுள்களின் வழிபாட்டு தளங்களும் அடங்கும். 

முதலில் இந்நோய், மனிதர்களிடம் ஏற்ப்படுத்தி  ள்ள அச்சங்களின் வெளிப்பாடுகளையும், அடுத்தவர் மேல் குற்றம் சுமத்தும் மனப்போக்கையும் பார்ப்போம். சில இடங்களில் மருத்துவர்களை அவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீடுகளிலிருந்து வெளியேறச் சொல்வதும், இறந்த மருத்துவர்களை மரியாதையுடன் ஈம காரியங்களை செய்யவிடாமல், மிக மோசமாக நடத்துவதுமாக சிலர் உள்ளார்கள். மேலும் ஒரு நாடுதான் இந்த நோயை பரப்பியது என்றும், ஒரு மதத்தவர்தான் பரப்பினார்கள் என்றும் பலவித அவதூறுகள். இச்செயல்கள் யாவும் மிகுந்த மன வருத்தத்தைத் தரும் செயல்களாக உள்ளது.
இச்சமயத்தில் இதற்கு முன் உலகில் நடந்த இம்மாதிரியான நோய்களைப் பற்றிய சரித்திர நிகழ்வை சிறிது பார்ப்போம். பிளேக், காலரா, மலேரியா, அம்மை, போலியோ, எய்ட்ஸ், எபோலா, சார்ஸ் என்று பலநோய்கள். இதில் பிளேக் நோயின் வரலாற்றைப் பார்ப்போம்.

கி.பி 1347லிருந்து 1354 வரை கருப்பு சாவு (black death)  என்று அழைக்கப்பட்ட, பிளேக், ஜரோப்பிய கண்டத்தையே புரட்டிப் போட்டது. அது 1340 களிலேயே இந்தியா, சீனா, பாரசிகம், சிரியா மற்றும் எகிப்த்தை தாக்கியது. இந்த நோயால் ஜரோப்பாவில் சுமார் 3 கோடி மக்கள் இறந்தார்கள். இது ஆடு, மாடு மற்றும் கோழிகளையும் தாக்கியது. பதற்றம், அச்சம் காரணமாக மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க மறுத்தார்கள். மத குருமார்கள் இறந்தவர்களுக்கு ஈமச் சடங்குகளை செய்ய மறுத்தார்கள். வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறக்க மறுத்தார்கள்.

இது கடவுளின் தண்டனை என்று கருதி, தங்கள் மதகோட்பாடுகளுக்கு மாற்று கருத்துள்ள பிற மதத்தவரை – குறிப்பாக யூதர்களைக் கொன்று குவித்தார்கள். மேலும் மததீவிர பற்றுள்ள – கசைநோன்பாளர்கள் (flagellants) கூர்மையான ஆணிகள் உள்ள கடினமான தோல் சவுக்கில் தங்களை தாங்களே அடித்துக் கொண்டார்கள்.

ஆனால் இம்மாதிரி எந்த செயலுக்கும் இந்நோய் கட்டுப்படவில்லை. கடைசியில் இவர்கள் நோய் கண்டவர்களை தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி போன்ற செயல்களால் இந்த நோயை கட்டுப்படுத்தினார்கள்.  

இதே பிளேக் செப்டம்பர் 1896ல் மும்பை, கொல்கட்டா போன்ற நகரங்களைத் தாக்கியது. மும்பையில் மட்டும் டிசம்பர் வரை, வார வாரம் 1900 மக்கள் இறந்தார்கள். மொத்தம் இந்தியாவில் 1 கோடி மக்கள் இறந்தார்கள். இதன் காரணமாக அப்பொழுதைய பிரிட்டிஷ் அரசின் கீழ் இயங்கிய சுகாதாரத்துறை, காவல்துறை உதவியுடன் நோயுற்றோரைத் தேடுவதும், அவர்களைத் தனிமைப்படுத்துவதும், பயணக் கட்டுப்பாடு, போன்ற கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது அரசியலாகி, 1897ல் புனேயில் இரண்டு சாபேகர் சகோதரர்கள் (chapekar  brothers) புனே சிறப்பு பிளேக் கமிட்டி தலைவரான வால்டர் சார்லஸ் ராண்ட் (walter charles rand) என்ற இந்தியன் குடிமுறை பணி அதிகாரியை (Indian civil Services Officer), சுட்டுக் கொன்றனர்.

ஆக பிளேக், அரசியல், மத, பொருளாதார தாக்கத்தை சமுதாயத்தில் உண்டாக்கியது. 20ம் நூற்றாண்டில் தடுப்பு ஊசி கண்டு பிடித்த பின்னரே, இந்த நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்தினார்கள். இன்று கொரோனாவும் அதே நிலைக்கு உலகத்தை கொண்டு வந்துள்ளது. இது நம்மை நாமே தீவிரமாக ஆராய வேண்டிய தரும்.

சனி, 28 செப்டம்பர், 2019

கீழடி அகழ்வாராய்ச்சியும், சங்க இலக்கியமும்


353 செ.மீ (11.58 அடி) ஆத்தில்  கிடைத்த  பொருள்கள் கொண்டு பகுப்பாய்வு செய்ததில், கீழடியின் காலம் கி.மு. 580 என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 200 செ.மீ (6.50 அடி) ஆத்தில் கிடைத்த பொருள்கள் பகுப்பாய்வில், அதன் காலம் கி.மு 214 மற்றும் கி.மு 174 என்று தெரிய வந்துள்ளது.  அதாவது கி.மு. 600 லிருந்து 174 வரை அந்த ஊர் இருந்தற்கு ஆதாரமாக இது அமைந்துள்ளது.

இதில் கால அளவு மற்றுமல்லாது நாம் கவனிக்க வேண்டியது, இங்கு கிடைத்த பொருள்கள். இலக்கியம் என்று கூறி சரித்திர ஆதாரமாக ஏற்க மறுக்கப்பட்ட சங்க இலக்கியங்களில், குறிப்பாக மதுரை காஞ்சி, நெடுநல்வாடை, - அடங்கிய பத்துபாட்டு, அகம், புறம், மற்றும் சிலம்பு, இவைகளில் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

மதுரை காஞ்சி 

1)     வரி 90-91            -           கிணறு
2)     வரி 93                 -           பூட்டு
3)     வரி 258              -            கரும்பு இயந்திரம்
4)     வரி 315-316         -      முத்து, சங்கு கீறியறுத்த வளையல்
5)     வரி 400-401        -           சங்கு சுட்ட சுண்ணம்பு
6)     வரி 421-422         -          செம்பில் செய்த பொருள்
7)     வரி 433                -          சிவந்த நுண்ணிய பூவேலைபாடுடைய சேலை     
8)     வரி 519-22          -             சிறிய, நெடிய மடிப்புடவை
9)     வரி 637-641       -        கூரிய கத்தி
10)  வரி 721               -           கஞ்சியிட்ட புடவை
11)  வரி 730                  -         கல்லால் செய்த சாக்கடை நீர்கடத்தும் வாய்க்கால்        

புறம்

1)     பாடல் 24 – வரி 32-33       -    வளையல்
2)     பாடல் 233 – வரி 3-4          - பொன்னாற் செய்யப்பட்ட திகிரி(சக்ராயுதம்)
3)     பாடல் 274 – வரி 1-2          -   பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை

திருமுருகாற்றுப்படை

     வரி 15                                       -     பூவேலைப்பாடு உள்ள சிவப்பு உடை
    
நெடுநல்வாடை

    வரி 95-97                                  - மாடியில் விழும் மழை நீர் கடத்தும் குழாய்

சிலம்பு ஊர்காண் காதை

1)     வரி 145-147                    -    சுடுமண் ஒடு, செங்கல்
2)      வரி 205-207                   -   பருத்தி, எலிமயிர் (linen), பட்டு நூல் என பலவகை நூல்களால் செய்யப்படட மடிப்புடவை , ஆடை  
          
ஆதலால் இந்திய வரலாற்றை, சங்க இலக்கியங்களை கொண்டு மாற்றி எழுத வேண்டும்.