கொரோனா இன்று உலக மக்கள்
யாவரையும் பயமுறுத்தும் ஒரு தொற்று
வியாதியாக உள்ளது. இந்த நோயினால் எல்லா நாடுகளும், சுகாதாரம் மற்றும்
பொருளாதாரத்தில், பாதிக்கப்பட்ட்டுள்ளது. இப்பொழுது அனைவரும் சமூக இடைவெளி விட்டு,
கூட்டம் கூடாமல் இருக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள். இதில், அதிகம் கூட்டம் கூடும்
இடமாகிய அனைத்து மத கடவுள்களின் வழிபாட்டு தளங்களும் அடங்கும்.
முதலில் இந்நோய், மனிதர்களிடம் ஏற்ப்படுத்தி உள்ள அச்சங்களின் வெளிப்பாடுகளையும், அடுத்தவர் மேல் குற்றம் சுமத்தும் மனப்போக்கையும் பார்ப்போம். சில இடங்களில் மருத்துவர்களை அவர்கள் வாடகைக்கு
குடியிருக்கும் வீடுகளிலிருந்து வெளியேறச் சொல்வதும், இறந்த மருத்துவர்களை
மரியாதையுடன் ஈம காரியங்களை செய்யவிடாமல், மிக மோசமாக நடத்துவதுமாக சிலர்
உள்ளார்கள். மேலும் ஒரு நாடுதான் இந்த நோயை பரப்பியது என்றும், ஒரு மதத்தவர்தான்
பரப்பினார்கள் என்றும் பலவித அவதூறுகள். இச்செயல்கள் யாவும் மிகுந்த மன
வருத்தத்தைத் தரும் செயல்களாக உள்ளது.
இச்சமயத்தில் இதற்கு முன் உலகில் நடந்த இம்மாதிரியான நோய்களைப் பற்றிய
சரித்திர நிகழ்வை சிறிது பார்ப்போம். பிளேக், காலரா, மலேரியா, அம்மை, போலியோ,
எய்ட்ஸ், எபோலா, சார்ஸ் என்று பலநோய்கள். இதில் பிளேக் நோயின் வரலாற்றைப்
பார்ப்போம்.
கி.பி 1347லிருந்து 1354 வரை கருப்பு சாவு (black death) என்று அழைக்கப்பட்ட, பிளேக், ஜரோப்பிய கண்டத்தையே புரட்டிப் போட்டது.
அது 1340 களிலேயே இந்தியா, சீனா, பாரசிகம், சிரியா மற்றும் எகிப்த்தை தாக்கியது.
இந்த நோயால் ஜரோப்பாவில் சுமார் 3 கோடி மக்கள் இறந்தார்கள். இது ஆடு, மாடு மற்றும்
கோழிகளையும் தாக்கியது. பதற்றம், அச்சம் காரணமாக மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க
மறுத்தார்கள். மத குருமார்கள் இறந்தவர்களுக்கு ஈமச் சடங்குகளை செய்ய மறுத்தார்கள்.
வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறக்க மறுத்தார்கள்.
இது கடவுளின் தண்டனை என்று கருதி, தங்கள் மதகோட்பாடுகளுக்கு மாற்று கருத்துள்ள
பிற மதத்தவரை – குறிப்பாக யூதர்களைக் கொன்று குவித்தார்கள். மேலும் மததீவிர
பற்றுள்ள – கசைநோன்பாளர்கள் (flagellants) கூர்மையான ஆணிகள் உள்ள
கடினமான தோல் சவுக்கில் தங்களை தாங்களே அடித்துக் கொண்டார்கள்.
ஆனால் இம்மாதிரி எந்த செயலுக்கும் இந்நோய் கட்டுப்படவில்லை. கடைசியில் இவர்கள்
நோய் கண்டவர்களை தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி போன்ற செயல்களால் இந்த நோயை
கட்டுப்படுத்தினார்கள்.
இதே பிளேக் செப்டம்பர் 1896ல் மும்பை, கொல்கட்டா போன்ற நகரங்களைத் தாக்கியது.
மும்பையில் மட்டும் டிசம்பர் வரை, வார வாரம் 1900 மக்கள் இறந்தார்கள். மொத்தம்
இந்தியாவில் 1 கோடி மக்கள் இறந்தார்கள். இதன் காரணமாக அப்பொழுதைய பிரிட்டிஷ்
அரசின் கீழ் இயங்கிய சுகாதாரத்துறை, காவல்துறை உதவியுடன் நோயுற்றோரைத் தேடுவதும்,
அவர்களைத் தனிமைப்படுத்துவதும், பயணக் கட்டுப்பாடு, போன்ற கடும் நடவடிக்கைகளை
மேற்கொண்டனர். இது அரசியலாகி, 1897ல் புனேயில் இரண்டு சாபேகர் சகோதரர்கள் (chapekar brothers) புனே சிறப்பு பிளேக் கமிட்டி
தலைவரான வால்டர் சார்லஸ் ராண்ட் (walter charles rand) என்ற இந்தியன் குடிமுறை பணி அதிகாரியை (Indian civil Services Officer), சுட்டுக் கொன்றனர்.
ஆக பிளேக், அரசியல், மத, பொருளாதார தாக்கத்தை சமுதாயத்தில் உண்டாக்கியது. 20ம் நூற்றாண்டில் தடுப்பு ஊசி கண்டு பிடித்த பின்னரே, இந்த
நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்தினார்கள். இன்று கொரோனாவும் அதே நிலைக்கு உலகத்தை கொண்டு வந்துள்ளது. இது நம்மை நாமே தீவிரமாக ஆராய
வேண்டிய தருணம்.