நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

திருநெல்வேலி மாவட்டத்தில் பாண்டிய நாட்டு குடவரை கோவில்கள் – I

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு பாண்டியர்களின் குடவரை கோவில்களைப் பற்றி நாம் பார்ப்போம். மலையடிக்குறிச்சியில் உள்ள மகாதேவர் கோவில், வீரசிகாமணி கைலாசநாதர் கோவில், திருமலபுரத்தில் உள்ள பசுபதிஸ்வர் கோவில் – இது ASI யின் கீழ் உள்ளது, மற்றும் அனையூரில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி கோவிலும் உள்ளது. இதில் முதலில் மலையடிக்குறிச்சி மகாதேவர் கோவிலைப் பார்ப்போம். இது பாறையைக் குடைந்து கல் தூண் அமைத்து கர்ப்பக்கிரகத்தில் லிங்கம் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி,600 -650 ஆக இருக்கக்கூடும். இந்தத் தூண் அமைப்பு அதை உறுதி செய்கிறது. பின்னால் கி. பி. 700-800 ல் இந்த குடவரைக்கு முன் கல் தூணுடன் கூடிய ஒரு மண்டபமும் அதில் ஒரு தாயார் சன்னதியும் உள்ளது. தமிழர்களின் வழிபாடு முறையில் குறிப்பாக பாண்டியர்களின் கோவில்களில் இறைவன் தனியாகவே இருப்பார், அது ஆண் தெய்வமானலும், பெண் தெய்வமானலும் தனியாகவே இருப்பார்கள்.இறைவன் துணையோடு இருப்பது கி.பி.900 பின்னர்தான். திருமுருகாற்றுப் படையிலோ, அல்லது, மதுரை காஞ்சியிலோ இறைவனை துணையோடு வர்ணிக்கவில்லை. இக்கோவில்களுக்கு ராஜபாளையம் – தென்காசி சாலையில், வாசுதேவ நல்லூர் அடுத்து சுப்பிரமணிபுரம் என்ற ஊர் தாண்டி சிறிது தூரத்தில் இடது பக்கம் செல்லும் சாலையில் செல்லவேண்டும். மலையடிக்குறிச்சி அரசாங்க பள்ளிக்கு அருகில் உள்ளது இந்த கோவில். இங்கு உள்ளே செல்லும் பாதையில் ஒரு ஆர்ச் அமைத்துள்ளனர் அதில் கி. பி. 600 ஆம் ஆண்டை சேர்ந்த குடவரை கோவில் என்று எழுதி இருக்கும். இங்கு கதவு பூட்டியிருக்கும் நீங்கள் சீனிவாசன், போன் 7708035222 க்கு அழைத்து கூப்பிட்டால் வந்து கதவை திறந்து விடுவார்கள். உங்கள் போனில் மேப்பில் Malayadikurichi Rock cut temple என்று தேடி, போகும் பாதைக்கு அதை வழிகாட்டியாக வைத்துக் கொள்ளவும்.