நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

திங்கள், 15 ஜூலை, 2019

மதுரை நகருக்குள் அகழாய்வின் அவசியம்

https://tamil.thehindu.com/tamilnadu/article28427038.ece/amp/?__twitter_impression=true

 அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகனம் நிறுத்தும் இடமா?- மதுரையில் பார்க்கிங் வசதிக்காக தோண்டியபோது தென்பட்ட பழங்கால மண்டபம்

Published : 14 Jul 2019 09:41 IST
Updated : 14 Jul 2019 09:41 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட்டை அப்புறப்படுத்திவிட்டு பல அடுக்கு பார்க்கிங் வசதி கட்டப்படும் இடத்தைத் தோண்டியபோது பூமிக்கடியில் பழங்கால மண்டபமும் தூணும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் 2.03 ஏக்கரில் தரை தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ.40.19 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாகன நிறுத்தம் 1-ல் முதலாவது கீழ்தளத்தில் 118 கார்கள், 416 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம். இரண்டாவது கீழ்தளத்தில் 1,185 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
அதேபோல் 2-வது வாகன நிறுத்தத்தின் முதல் கீழ்தளத்தில் 371 கார்கள், 2-வது கீழ்தளத்தில் 4,776 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
தரைதளம் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு அமைப்புகள் மற்றும் புராதன மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போதிய தீயணைப்பு வசதிகள், சூரிய சக்தியுடன் கூடிய அவசரகால மின் வழங்கல், தகவல் ஒளிபரப்பு சாதன வசதிகள் என பல்வேறு வசதிகள் இங்கு இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், இன்று இப்பகுதியில் பூமிக்கடியில் பழங்கால மண்டபம், தூண்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அருகிலேயே செங்கல் கட்டுமானமும் தெரிகிறது.
ராணி மங்கம்மாளின் அரண்மனையும் அவர் சிறை வைக்கப்பட்ட இடமும் இந்தப் பகுதி தான் என உறுதி செய்யப்படாத செவி வழிச் செய்தி இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகன நிறுத்தும் இடம் கட்டக்கூடாது. அந்த இடத்தை அகழாய்வு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை அரசும் வரலாற்று ஆய்வாளர்களும் மேற்கொள்ள வேண்டும் என மதுரை வாசிகள் கூறுகின்றனர்.

*********************************************************************************

மேற்கண்ட செய்தி என் மனதை பதர வைக்கிறது. ஏற்கனவே, கீழமாசி வீதி காவல் நிலையம், விளக்குதூண் அருகில் தெருமட்டத்திலிருந்து 10 அடிக்கும் கீழே இருந்த கழிப்பறை,   கீழ ஆவணிமூல வீதியில் புதுமண்டபம் எதிரிலிருந்த வசந்தன் குளம் என்ற ரவுண்டாணா, போன்ற மதுரையின் பழமை சின்னங்கள், சமீபகாலங்களில் அழிக்கப்பட்டன.

சங்ககால, மதுரை காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் அங்காடி அமைந்த இடம் என்று என் ஆய்வில் குறிப்பிட்ட இடம் இது. இதே போல் மீனாட்சி பார்க், அரண்மனை அமைந்த இடம். இவை இரண்டையும் அகழ்வாய்வு செய்யவேண்டும் என்று அப்பொழுதைய மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் திரு. அமர்நாத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

இப்பொழுது அதே இடத்தில் இக்கண்டுப்பிடிப்பை மூடி மறைக்கவே முயல்வார்கள். தற்பொழுது உள்ள மதுரை பாரளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடசன், மதுரையின் பழமையை காக்க நினைப்பவர். அவர் மதுரை பாரம்பரிய நகர் என்று அறிவிக்க நினைப்பவர். அவர் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றால் ஏதாவது நடக்கும் என்று எண்ணுகிறேன்.

இவரின் அறிமுகம் யாருக்கவாது இருந்தால், எனக்கு அவரை சந்திக்க உதவவும்.