கீழடி பற்றி The Hindu நாளிதழில் கீழ்கண்ட தகவல்கள் 1-10-2017 வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்வது, 2016 ஆண்டு வரை தோண்டப்பட்ட குழிகள்
4.5 மீட்டர் (14.75 அடி) ஆழம். அதில் கார்பன் கால நிர்ணயத்திற்கு (carbon dating) எடுக்கப்பட்ட மாதிரிகள் 2 மீட்டர்
(6.50 அடி) ஆழத்தில். இதன் கால அளவு 2160+30 மற்றும் 2200+30 அதாவது கி.மு.174-144
மற்றும் கி.மு.214-184. இது 6.50 அடி ஆழத்தில் கிடைத்த மாதிரி. இதுவே இன்னும் ஆழத்தில்
கிடைக்கும் மாதிரியாக இருந்தால் இக்காலத்திற்கு முந்தியதாக இருக்குமேயல்லாமல்
பிந்தியதாக இருக்காது.
தற்பொழுதைய ASI கண்காணிப்பாளர் திரு. P.S.ஸ்ரீமான் இந்த மூன்றாவது அகழ்வாய்வில் உடைந்த, துண்டு துண்டான சேதாரமான சுவர்
இருந்ததாகவும், அது முந்தைய கட்டுமானமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அதில் எடுக்கப்பட்ட மாதிரிகள் கார்பன் கால ஆய்வுக்கு பின் கீழடியின் காலம்
இன்னும் பின்னால் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
‘சங்ககால மன்னர்களின் கால நிலை’ – Dr.பத்மஜா ரமேஷ், V.P.புருஷோத்தமன், அவர்களின் புத்தகத்தின் படி கி.மு 325- 300ல் கொற்கையைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டியன் நெடுந்தேர் செழியன் என்ற நெடியோன் (இவன் பூதபாண்டியன்
– தேவி பெருங்கோட் பெண்டு வின் மகன்), அப்பொழுது மதுரையை ஆண்ட அகுதையைப் போரில்
வென்று மதுரையைக் கைப்பற்றி, மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை விரிவுபடுத்தியதாக
அகம், புறம் பாடல்களில் உள்ளதை குறிப்பிடுகிறார்கள்.
பாண்டியர்கள் போரிடும் முறையில் முக்கியமானது, எதிரி நாட்டின் எல்லையில் உள்ள
ஊர்களை அழித்து வீடுகளை தரைமட்டமாக இடித்து, பெண்கள், குழந்தைகள், முதியவர்களை
விரட்டியடித்து, வழுவான ஆண்களை போர்க் கைதியாக பிடிப்பது (புறம் 57 காரிக்கண்ணனர்,
இலவந்திகைப் பள்ளி துஞ்சிய பாண்டியன் நன்மாறனுக்கு எதிரியை அழிக்கும் முறை பற்றி
கூறுவது) அவ்வகையில் பார்க்கும் பொழுது மதுரை மீது படையேடுத்து வரும்பொழுது,
வழியில் உள்ள கீழடியை அழித்திருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
இப்பொழுது கி.மு 214 என்றுள்ள கார்பன் கால நிர்ணயம் (carbon dating), தற்பொழுது சேதமடைந்த
சுவற்றில் எடுக்கப்பட்ட மாதிரியின் கார்பன் கால நிர்ணய சோதனைக்கு பின், கி.மு.325-300 என்று முடிவு
வந்தால், நெடியோனின் படையெடுப்பு காலத்தோடு ஒத்துப்போவதால் அவன் படையெடுப்பின்
காரணமாக கீழடி அழிந்ததை உறுதிப்படுத்தலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, கார்பன் கால நிர்ணயத்திற்கு எடுக்கும்
மாதிரிகள் கரிமச் சேர்மானம் (organic matters) உள்ள பொருட்கள் மட்டுமே ஆகும். சில உதாரணங்கள் – மரத்துண்டு,
மரக்கரி, எலும்பு, எரிந்த எலும்பு, நத்தை ஒடுகள், தேங்காய் நார்க்கழிவுகள்,
தந்தம், காகிதம், துணி, விதைகள், தாணியங்கள், சமைத்த உணவுகள், களிமண் செங்கல்
நடுவில் உள்ள வைக்கோல், சுட்ட செங்கல் போன்றவைகள்.